ஷா ஆலம், ஜன 21: சிரம்பான், பண்டார் பாரு நீலாயில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இயங்கி வந்த நகை கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இரவு 8.30 மணியளவில் தனது துறைக்கு புகார் கிடைத்ததாக நீலாய் மாவட்டக் காவல் துறை தலைவர், சுபரிண்டெண்ட் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
“ஆரம்ப தகவலின் அடிப்படையில், இருவரும் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து, நீல நிற யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர் என தெரிய வந்தது. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை மற்றும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
“சம்பவம் நடந்த நேரத்தில், கடையில் இரண்டு ஊழியர்கள் இருந்தனர், வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. சந்தேக நபர்கள் இருவரும் நகைகளை கொள்ளையடிக்க ஆரஞ்சு நிற லாலமோவ் டெலிவரி பையைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் இழப்பு RM60,000 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என ஜோஹாரி யாஹ்யா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு, 1971ஆம் ஆண்டு துப்பாக்கி ஆயுதச் சட்டம் (கடுமையான தண்டனை) பிரிவு 4 இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.


