மத்திய கிழக்கில் 649 மலேசியர்கள் இன்னும் தவிக்கின்றனர் - விஸ்மா புத்ரா

8 மார்ச் 2026, 2:38 AM
மத்திய கிழக்கில் 649 மலேசியர்கள் இன்னும் தவிக்கின்றனர் - விஸ்மா புத்ரா

கோலாலம்பூர், மார்ச் 7: மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் மோசமடைந்து வரும் மோதல்களைத் தொடர்ந்து, 649 மலேசியர் -கள் இன்னும் பல இடங்களில் தவிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், மார்ச் 7, மாலை 6 மணி நிலவரப்படி, 24,568 மலேசியர்கள் e-Konsular அமைப்பு மூலம் அமைச்சிடம் பதிவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடக்கும் இராணுவ மோதல்களில்  சிக்கித் தவிக்கும் மலேசியர்- களுக்கு உதவுவதிலும், தற்போது உள்ள வர்த்தக விமானச் சேவைகள் மூலம் அவர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குவதிலும் தற்போதைய முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன.

"அப்பகுதியில் உள்ள மலேசியத் தூதரகங்களும் தங்கள் செயல்பாடுகளின் கவனத்தை வெளியேற்றம் மற்றும் தூதரக உதவிகளை ஒருங்கிணைப்புக்கு மாற்றியுள்ளன," என்று அந்த அறிக்கை குறிப்பிடுவதுடன், மார்ச் 5 அன்று வெளியிடப்பட்ட பயண அறிவுரை இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் அது மேலும் கூறியது.

பிராந்திய பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் மலேசியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான அவசரத் திட்டத்திற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவுவதற்கும், தற்போது உள்ள வர்த்தக விமானங்கள் மூலம் அவர்கள் திரும்புவதை எளிதாக்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, ஓமன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள பயண வழித்தடங்கள் மற்றும் வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தி அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் ஒருங்கிணைக்கப் பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.

சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, ஓமனில் சிக்கித் தவித்த மலேசியர்களின் எண்ணிக்கை சமீபத்திய வெளியேற்றத்தைத் தொடர்ந்து 190-லிருந்து 5 ஆகக் குறைந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், துபாய் ஆகிய இடங்களில் சிக்கிய 246 மலேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்னும் 176 பேர் தூதரகத்தின் செயலில் உள்ள பட்டியலில் உள்ளனர்."துபாயில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், மீதமுள்ள மலேசியர்களைத் தொடர்பு கொண்டு, ஏர் அரேபியா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற மாற்று டிக்கெட் ஏற்பாடுகளுக்கு, தங்குமிடப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் உதவி வருகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமானம் EK 342, மார்ச் 6 அன்று துபாயிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்டது. இதில், சிக்கித் தவித்த பயணிகள் மற்றும் ஜித்தா வழியாகப் பயணம் செய்த உம்ரா யாத்ரீகர்கள் உட்பட 222 மலேசியப் பயணிகள் இருந்தனர்.

எமிரேட்ஸ், மார்ச் 7 முதல் கோலாலம்பூர்-துபாய் வழித் தடத்திற்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் தொடங்கியுள்ளது. அபுதாபியில், 25 மலேசியர்கள் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர், அதே நேரத்தில் ஐந்து பேர் நாடு திரும்பியுள்ளனர்.

பஹ்ரைனில், தற்போது மலேசியர்கள் யாரும் சிக்கிக்கொள்ள வில்லை, இருப்பினும் 105 பேர்  வெளியேற்றத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில், 243 மலேசியர்கள் இன்னும் தவித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் உம்ரா யாத்ரீகர்கள் ஆவர்.ஜித்தாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பைத் தீவிரப்படுத்தி, அவர்கள் திரும்புவதை எளிதாக்கியுள்ளது.

ஜித்தாவிலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இரண்டு மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்கள் மார்ச் 6 அன்று புறப்பட்டன. மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியாவின் அடுத்த விமானங்கள் மார்ச் 8-ஆம் தேதியும், பாடிக் ஏர் விமானம் மார்ச் 9-ஆம் தேதியும் இயக்கப் படவுள்ளன.

ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவ மன்றத்தின் சமீபத்திய அறிக்கையையும் அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதுடன், அங்குள்ள நிலைமை மேம்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (MKN) இணைந்து செயல்பட்டு வருவதாக அது மேலும் கூறியது.

அப்பகுதியில் உள்ள மலேசியர்கள்  https://ekonsular.kln.gov.my என்ற e-Konsular அமைப்பு மூலமாகவோ அல்லது அருகிலுள்ள மலேசியத் தூதரகங்கள் மூலமாகவோ தங்கள் விவரங்களைப் பதிவு செய்து புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

புத்ரா ஜெயாவில் உள்ள அமைச்சின் செயல்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். அதை +603-8887 4570 என்ற எண்ணிலோ அல்லது dutyofficer@kln.gov.my  என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் (AS) ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.