சமுதாயத்தை உயர்த்த பெண்களின் பங்கு மிக அவசியம் – டாக்டர் ஹேமலா சிவம்

7 மார்ச் 2026, 3:01 AM
சமுதாயத்தை உயர்த்த பெண்களின் பங்கு  மிக அவசியம் – டாக்டர் ஹேமலா சிவம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடவிருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, Puteri Cili (APS Manja Sdn Bhd) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹேமலா சிவம் அவர்களை மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது. இவர் தொழில் துறை சிறப்பு விருது 2024 மற்றும் உலகின் சிறந்த பெண்கள் தலைமைத்துவ சிறப்பு விருது 2024 போன்ற விருதுகளை பெற்றுள்ளதுடன், மலேசியாவின் ஒரு முக்கிய இந்தியப் பெண் தொழில்முனைவோராகவும் மற்றும் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

மேலும், இவர் மைக்கி (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry) மகளிர் பிரிவுத் தலைவராகவும், இந்தியப் பெண்களின் வணிக வளர்ச்சி, உரிமைகள் மற்றும் ‘பெண் 2.0’ போன்ற திட்டங்கள் மூலம் அதிகாரமளித்தலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 வருடங்களாக Puteri Cili நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வரும் அவர், இந்த துறையில் பல சவால்களைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார். முதலில், இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செல்வது தனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார். அதனால், அவற்றைப் பற்றிய அறிவை வளர்க்க, அதற்கான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து கற்றதாகவும், இதன் மூலம் நிர்வாகத்தைச் சரியான பாதையில் தன்னால் கொண்டு செல்ல முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வியாபாரத் துறை அவருக்குப் பல வாழ்க்கை பாடங்களைக் கற்று கொடுத்துள்ளதாக ஹேமலா பகிர்ந்துகொண்டார். வாழ்க்கையில் வரும் எந்த ஒரு தோல்வியையும் முட்டுக் கட்டையாகப் பார்க்காமல், அவற்றை தொடர்ந்து முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகவும் வாய்ப்புகளாகவும் கருத வேண்டும் என்றார்.

சமுதாயத்தில் மதிப்புக்குரிய ஓர் அந்தஸ்தை அடைய, குடும்பம் தனக்கு மிகுந்த துணையாக இருந்ததாகக் கூறினார். எந்தவொரு சவாலையும் எதிர்த்து போராடும் மனப்பக்குவம் நமக்கு தேவை. சிறு வயதிலிருந்தே அதற்கான மன வலிமை ஊட்டி பெற்றோர் தன்னை வளர்த்ததாகவும், தற்போது வியாபாரத் துறையில் பீடுநடை போட தன்னுடைய கணவரும் முழு ஆதரவு வழங்கி வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்குக், குறிப்பாகப் பெண்களுக்கு வியாபாரத்தைத் தொடங்க உதவுவதற்காக தான் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் ஹேமலா மகிழ்ச்சியாக தெரிவித்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், வியாபாரத் துறையில் ஈடுபட நினைக்கும் பெண்களுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனையாக '' சிறுகக் கட்டி பெருக வாழ்'' என்னும் நமது முன்னோர் பொன்மொழியை மனதில் கொள்ள வேண்டும் என்றார். அதாவது அகலக்கால் வைக்காமல் கவனமாகவும் பொறுமையாகவும் செயல்படுவதோடு வியாபாரத்தை சரியான முறையில் நடந்த ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மை மிக முக்கியமான அம்சங்களாகும் என குறிப்பிட்டார். வியாபாரம் தொடங்கும் முன் அல்லது நிதி மற்றும் வங்கி கடன் உதவிகளை பெற தேவையான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய மடாணி அரசின் பல பிரிவுகளும் மற்றும் சிலாங்கூர் மாநில அரசும், வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்கான பல கடனுதவித் திட்டங்களை கொண்டுள்ளன. அவற்றில் அமானா இக்தியார் மலேசியா , ஹிஜ்ரா, நாடி, தெக்குன் போன்றவைகளும் அடங்கும். இத்தகைய திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள, மடாணி அல்லது சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டல் தளங்களை நாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த உதவிகளைப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும், அவர்களை நேரில் சந்தித்து விவரங்கள் பெறவும் அறிவுறுத்தினார். அதிகாரிகள் அரசாங்க உதவிகளை எளிதாக பெறும் வழிமுறைகளை தெளிவாக விளக்குவார்கள் என தெரிவித்தார்.

வியாபாரம் தொடங்கும் முன் நிதி மற்றும் கடனுதவிகளைப் பெற தேவையான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பெரும்பாலும், அவர்கள் சரியான ஆவணங்களைக் கொண்டு இல்லாமல் இருப்பது அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடையாக உள்ளதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், பெரும்பாலும் நிதி மற்றும் அரசாங்க உதவிகள் பெற முடியாமல் போவதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தலைமை மற்றும் புதுமை, பெண்களுக்கான வழிகாட்டல், வியாபாரத்தில் சிறந்து விளங்குதல், சமூக சேவைகள், தொடர்ச்சியாக தொழில் துறை மேம்பாடு கல்வி கற்றல் தான் மிகுந்த ஆர்வம் கொண்ட விஷயங்களாகும் என்றார் அவர்.

இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால் குடும்பத்தையும் தொழிலையும் சரியான முறையில் கவனித்துக் கொள்வது ஆகும். உயர்ந்து வரும் வாழ்க்கை செலவை சமாளிக்க, கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் குடும்பத்தைச் சரியாக வழிநடத்த ஆண்கள் பெண்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமுதாயத்தின் தூண்களாக விளங்கிட தொழில்துறையில் அதற்கான அறிவை பெறுவதுடன் மனந்தளராமல் எதையும் எதிர்த்து போராடும் மனவலிமையைப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றார் ஹேமலா.

தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் மற்றும் திறன்களை மேம்படுத்த உதவும் படிப்புகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி அனைத்து பெண்களுக்கும் தன்னுடைய மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.