கோலாலம்பூர், மார்ச் 6 — பெட்டாலிங் ஜெயாவில் உள்ள காயு ஆரா அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் முக்கிய மின் விநியோக பலகை (Main Switchboard – MSB) கடுமையாக சேதமடைந்தது. அதனால், ஏற்பட்ட மின்தடை செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.
தனது தொகுதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ நிதி ஒதுக்கீடும், ஊராட்சி மன்றத்தின் ஒத்துழைப்பும் மூலம் சேதமடைந்த MSB பழுதுபார்க்கப்பட்டதாகப் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார். எனினும், இந்த அமைப்பு உண்மையில் கூட்டு மேலாண்மை அமைப்பு (Joint Management Body – JMB) பொறுப்புக்குட்பட்டதாகும்.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், இந்த மின்தடை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மின்சாரம் வழங்கத் தவறியதனால் ஏற்பட்டது அல்ல என்று விளக்கினார். மாறாக, கட்டடம் முழுவதும் மின்சாரம் விநியோகிக்கும் MSB-இன் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
“இந்த சேதத்தால் முழுமையான மின்தடை ஏற்பட்டதுடன், மோட்டார் பம்ப் இயங்க முடியாததால் தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால், MSB பராமரிப்புப் பொறுப்பு JMB-க்கு உட்பட்டது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
2007ஆம் ஆண்டிலிருந்து MSB பராமரிக்கப்படவில்லை என தகவல் வழங்கப்பட்டதாக ஜமாலியா தெரிவித்தார். அதன் பின்னர் JMB ஒரு ஒப்பந்ததாரரை நியமித்து ஆய்வு செய்து பழுதுபார்க்க ஏற்பாடு செய்ததுடன், அதற்கான செலவுக்காக தனது அலுவலகத்தின் உதவியையும் கோரியதாக ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மொத்த பழுதுபார்ப்பு செலவு RM25,000 ஆக இருந்ததாகவும், இதில் JMB RM5,000 மட்டுமே செலுத்த முடிந்ததால், மீதமுள்ள RM20,000 தொகையை அவரது தொகுதி அலுவலகம் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவியாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.
பழுதுபார்ப்பு தாமதமானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஜமாலியா, இந்தப் பணிகள் அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டதால், செயல்படுத்துவதற்கு முன் சில நடைமுறைகள் அவசியம் என விளக்கினார்.
ஆனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு, வழக்கமாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் எடுக்கும் செயல்முறை இரண்டு வேலை நாட்களுக்குள் முடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனது அலுவலக அதிகாரிகளை JMB-யுடன் ஒருங்கிணைக்க உத்தரவிட்டதுடன், பிரச்சனை விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தரப்புகளைத் தானும் நேரடியாக தொடர்புகொண்டதாக ஜமாலியா கூறினார்.








