கோலாலம்பூர், மார்ச் 6- மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என மலேசியாவும் பாகிஸ்தானும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதே தற்போதைய சூழலில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க ஒரே வழி என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒருமனதாகத் தெரிவித்தனர்.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக மேற்கொண்ட உரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகள் குறித்து இரு தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துரைத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், இது சர்வதேச சட்டக் கோட்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தனது முகநூல் பதிவில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் விளக்கமளித்தார்.
இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட வேண்டிய தொடக்கக்கால முயற்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நிலைமையை மேலும் மோசமாக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர ரீதியிலான உறவுகள் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று மலேசியா உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை அங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர் பதற்றம் உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.







