ஷா ஆலம், டிச 18: மழைக்காலத்தின் போது சந்தையில் மீன்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) உறுதிப்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு மூலம் இந்த அதிகரிப்பு அனைத்து பகுதிகளிலும் ஏற்படவில்லை, மாறாக சில பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என அதன் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
"எங்கள் கண்காணிப்பின் முடிவுகள் சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு இருப்பதைக் காட்டுகின்றன. ஆனால், அது அனைத்து இடங்களிலும் ஏற்படவில்லை, மாறாக சில இடங்களை உள்ளடக்கியது.
"மீன்களின் விலையின் அதிகரிப்பு 30 சதவீதத்தை தாண்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், மழைக்காலத்தின் போது அதிக தேவை காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.
இருப்பினும், மொத்த விற்பனையாளர்கள் அல்லது வர்த்தகர்களால் விநியோகத்தில் ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால் விசாரிக்க தனது தரப்பு தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் (LKIM) உட்பட எந்தவொரு தரப்பினரும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் விநியோக முறைகேடு குறித்து தகவல் தெரிந்திருந்தால், புகார் தாக்கல் செய்ய முன்வருமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
"இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை, மாறாக ஊடகங்களால் மட்டுமே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது," என அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, மீன் விலை உயர்வு பருவமழை அல்லது மீன் பிடிப்பு குறைவதால் மட்டுமல்ல, சில மொத்த விற்பனையாளர்களின் சந்தை முறைகேட்டாலும் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


