புத்ராஜெயா, மார்ச் 5: பிப்ரவரி 25 அன்று சரவாக், கோத்தா சமரஹானில் 44 வயதான உள்ளூர் நபர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்தார். இது இந்த ஆண்டு பதிவான முதல் மரணம் ஆகும்.
2017-ல் ரேபிஸ் தொற்று நாட்டில் அறிவிக்கப்பட்டது முதல், மொத்தம் 91 வழக்குகள் பதிவாகியுள்ளன; அதில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 93 சதவீதமாக உயிரிழப்பு விகிதம் உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்தார்.
விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு விலங்குகள் கடித்த வரலாறு இல்லை என தெரிய வந்தது. ஆனால், அந்நபர் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு சுமார் 15 நாய்களை வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று பிப்ரவரி தொடக்கத்தில் திடீரென இறந்ததாகக் கூறப்படுகிறது என்றும் விசாரணயில் கண்டறிந்துள்ளதாக சுல்கிஃப்லி கூறினார்.
"ரேபிஸ் தொற்று என்பது கடியால் மட்டும் ஏற்படாது என்பதை இந்த வழக்கு நினைவூட்டுகிறது," என்று அவர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விலங்களுடன் நெருங்கிய தொடர்பு, கீறல்கள் அல்லது சரியான பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களைக் கையாளும் போதும்கூட தொற்று ஏற்படலாம் என்று சுல்கிஃப்லி விளக்கினார்.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் நெருங்கிய தொடர்புடையது என்பதை அங்கீகரிக்கும் 'ஒன் ஹெல்த்' அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாம் அனைவரும் ஆபத்தில் இருக்கிறோம்,” என்றார் அவர்.
விலங்குகள் கடித்தால் அல்லது கீறல் காயங்கள் ஏற்பட்டால் ஓடும் நீர் மற்றும் சவர்க்காரத்தைப் பயன்படுத்தி குறைந்தது 15 நிமிடங்கள் கழுவுதல் உள்ளிட்ட உடனடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
பின், தடுப்பு (PEP) சிகிச்சையைப் பெறவும், செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவும், காட்டு விலங்குகளைக் கையாளுவதைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.
கூடுதலாக, சந்தேகத்திற்கிடமான விலங்குகளின் இறப்புகளை கால்நடை சேவைகள் துறை (DVS) அல்லது ஊராட்சி மன்றங்களிடம் உடனடியாகப் புகாரளிக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.








