ஷா ஆலம், மார்ச் 5: 'நூர்' (Nur) நாடக நடிகையும் அவரது கணவரும், சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசு வழங்கிய நில விற்பனை மோசடி தொடர்பாக விசாரணைக்கு உதவ மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று உலு லங்காட், கம்போங் சுங்கை செராய் பகுதியில் உள்ள ஒரு தஹ்ஃபிஸ் மதப்பள்ளியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்தத் தம்பதியினர், இன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
40 மற்றும் 30 வயதுடைய இந்தத் தம்பதியினர் நில மோசடி புகாரைத் தொடர்ந்து அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாக சம்பவம் குறித்து விளக்கிய சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அசாஹர் அப்துல் ரஹீம் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சொத்து மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள 56 வயது தொழிலதிபர் ஒருவருக்கு, கடந்த செப்டம்பர் 21, 2023 அன்று சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த நபர், சந்தேக நபரின் தந்தை மற்றும் மனைவியின் வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாக மொத்தம் 1.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
மஜிஸ்திரேட் நூருல் அசுயின் முகமட் தல்ஹா முன்னிலையில் இந்தத் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, இதே நடிகையும் அவரது கணவரும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் பல லட்சம் ரிங்கிட் மோசடி செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.








