மூவார், மார்ச் 5: லெங்கா, ஜாலான் ரெஞ்சோங்கில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில், நான்கு சக்கர வாகனத்தால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த முதியவரும் உயிரிழந்தனர்.
காலை 8:42 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து, லெங்கா திசையிலிருந்து வந்த 39 வயதுடைய உள்ளூர் நபர் ஓட்டி வந்த Ford Ranger வாகனம் எதிர் திசையில் நுழைந்ததால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்த ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனத்தை ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மூவார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 47 வயதுடைய நோர்மான் அகமட் மற்றும் அவரது மாமனாரான 77 வயதுடைய சாஅட் காசிம் ஆகிய இருவரும் தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயமடைந்தனர். சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் (HPSF) சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டிய நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5.15 கிராம் எடையுள்ள 20 'எராமின-5' (Eramin-5) மாத்திரைகளும், 0.39 கிராம் 'ஷாபு' (Syabu) போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டன.
சிறுநீர் பரிசோதனையில் அந்த நபர் 'மெத்தாம்பெட்டமைன்' (Methamphetamine) வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது சந்தேக நபர் சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.








