ஷா ஆலம், பிப் 20 - 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருளைப் பெரொடுவா பெஸ்ஸா காரை பயன்படுத்தி கடத்திச் சென்ற இரண்டு ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, பெடாஸ், ரெம்பாவ் அருகே இருக்கும், வடக்கு-தெற்கு (PLUS) நெடுஞ்சாலையின் 236.9வது கிலோமீட்டரில் சுமார் 30 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். நெகிரி செம்பிலான் போதைப்பொருள் குற்றப்பிரிவு மற்றும் புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
வாகனத்தின் பின்புற பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 பொதிகளில் சுமார் 1.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான, 30.6 கிலோ கிராம் எடையுள்ள ஷாபு வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அளவு போதைப்பொருள் சுமார் 30,000 பயனாளர்களைப் பாதிக்கக்கூடியது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் சிலாங்கூர் பூச்சோங்கிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், தெற்கு மாநிலங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இக்கும்பல் 2025ஆம் ஆண்டு முதல் இந்த செயலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
சிறுநீர் பரிசோதனையில் அந்த இரு ஆடவர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ள நிலையில் காவல்துறையினர் அவ்விருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


