கோலாலம்பூர், மார்ச் 4- ஈரான், ஈராக், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மலேசிய வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ பயண ஆலோசனையில் வலியுறுத்தியுள்ளது.
இப்பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை விஸ்மா புத்ரா உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வான்வெளியைத் திறந்துள்ள நிலையில், மார்ச் 4 முதல் 8 வரை ஜெத்தா மற்றும் மதீனாவுக்கான விமானச் சேவைகளை மலேசியா ஏவியேஷன் குரூப் மீண்டும் தொடங்கியுள்ளது.
துபாய் மற்றும் அபுதாபியில் தங்கியிருக்கும் மலேசியர்களின் பயணச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவர்களுக்குத் தேவையான தங்குமிடம் மற்றும் இதர உதவிகளை வழங்கவும் தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓமன், கத்தார் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் உயர் கல்வி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உடனடியாக ‘e-Konsular’ மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும், அவசரத் தேவையிருப்பின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறையை +603-8887 4570 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






