ஷா ஆலம், 3 மார்ச்: கிள்ளான், கம்போங் ரந்தாவ் பாஞ்சாங், ஜாலான் சுங்கை சாயிம் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு திருமண ஆடை அலங்காரக் கடை, மளிகைக் கடை மற்றும் ஒரு வீடு ஆகியவை தீப்பற்றி எரிந்தன. சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 6.52 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு கிள்ளான் மற்றும் தெற்கு கிள்ளான் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 12 வீரர்கள் அடங்கிய குழுவினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தத் தீ விபத்தில் ஒரு மாடி வீடு 30 விழுக்காடும், திருமண ஆடை அலங்காரக் கடை 98 விழுக்காடும், மளிகைக் கடை 80 விழுக்காடும் சேதமடைந்ததாக அவர் விளக்கமளித்தார். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.








