கோலாலம்பூர், மார்ச் 3 – 2026-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், மலேசிய மகளிர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று, தனது பயணத்தைத் தோல்வியுடன் தொடங்கியுள்ளது.
சிலியின், சான்டியாகோவில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் கால்பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் எதுவும் விழவில்லை.
இருப்பினும், இரண்டாவது கால்பாதியில் அயர்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 21-வது நிமிடத்தில் கேத்ரின் முல்லன் ஒரு ஃபீல்ட் கோல் அடித்தார். மூன்று நிமிடங்கள் கழித்து, காவ்மே பெர்டூ பெனால்டி கார்னர் மூலம் மற்றொரு கோலை அடித்து நிலையை இரட்டிப்பாக்கினார். இதனால், முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
இரண்டாம் பாதியில் அயர்லாந்து அணி தொடர்ந்து கோல் மழை பொழிந்தது. மூன்றாவது கால்பாதியில், சாரா மெக்காலே 34-வது நிமிடத்திலும், மிச்செல் கேரி 37-வது நிமிடத்திலும் தலா ஒரு ஃபீல்ட் கோல் அடித்தனர்.
ரோசின் அப்டன் 40-வது நிமிடத்தில் மற்றொரு ஃபீல்ட் கோலை அடித்து, அயர்லாந்தின் 5-0 என்ற கோல் கணக்கிலான பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுத்தார்.
“உண்மையில் அயர்லாந்துக்கு எதிராக நாங்கள் சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், தனிப்பட்ட தவறுகள், தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய ரீதியான ஒழுக்கக் குறைவு காரணமாக நாங்கள் தண்டிக்கப்பட்டோம். குறிப்பாக, அயர்லாந்தின் எதிர் தாக்குதல்களால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.”
“இந்தத் தோல்வியிலிருந்து வீராங்கனைகள் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். நாளை கனடாவுக்கு எதிரான அடுத்த போட்டிக்குத் தயாராவதற்கு எங்களுக்கு 24 மணிநேரம் உள்ளது. அதை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம்,” என்று மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் முகமது நசிஹின் நுப்லி மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு பகிர்ந்த காணொளியில் கூறினார்.
மலேசிய அணி அடுத்ததாக மார்ச் 4-ஆம் தேதி கனடாவையும், அதைத் தொடர்ந்து மார்ச் 6-ஆம் தேதி ஜப்பானையும் 'பி' பிரிவில் எதிர்கொள்கிறது.
போட்டி விதிமுறைகளின்படி, 'ஏ' மற்றும் 'பி' ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.








