பிரதமர் பதவிக்கால திருத்த மசோதா தோல்வி: நாடாளுமன்றத்தில் பரபரப்பு

3 மார்ச் 2026, 1:40 AM
பிரதமர் பதவிக்கால திருத்த மசோதா தோல்வி: நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கோலாலம்பூர், மார்ச் 3- மலேசிய பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 2026-ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த மசோதா, நேற்று மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தரப்பைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் வாக்கெடுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சரியாக 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்த எண்ணிக்கை சட்டத்திருத்தத்திற்குத் தேவையான குறைந்தபட்ச இலக்கை எட்டவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

வாக்கெடுப்பின் போது 32 உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை என்பதோடு, 44 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டதும் மசோதா தோல்வியுற முக்கியக் காரணமாக அமைந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தில் இத்தகைய மாற்றங்களை அமல்படுத்த வேண்டுமெனில், ஒட்டுமொத்த 222 உறுப்பினர்களில் குறைந்தது 148 பேரின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் கடந்த வாரம் இந்த மசோதாவை முதல் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டாம் வாசிப்பை முன்மொழிந்ததைத் தொடர்ந்து சபையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன.

இந்தத் திருத்தம் மாட்சிமை தங்கிய மாமன்னரின் சிறப்பு அதிகாரங்களையோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று பிரதமர் அன்வார் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.