ஜோகூர் பாரு, செப் 9 - ஜோகூர் பாரு வட்டாரத்தில் கேபிள் திருட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இடைநிலைப் பள்ளி மாணவர் உள்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 16 முதல் 26 வயதுக்குட்பட்ட அந்த நால்வரில் அந்நியப் பிரஜையும் ஒருவராவார் என்ற ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் கூறினார்.
கடந்த சனிக்கிழமை விடியற்காலை 5.15 மணியளவில் ஜாலான் சொங்கேட் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று இக்கும்பலின் நடவடிக்கையை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த நான்கு சந்தேக நபர்களும் புரோட்டோன் வீரா காரில் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றனர். எனினும், அவர்களை போலீசார் ஜாலான் பூங்கா ராயாவில் வெற்றிகரமாக மடக்கி பிடித்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
கைதானவர்களில் 16 வயது மாணவர் இன்னும் பள்ளியில் பயின்று வரும் வேளையில் மற்ற மூவரும் வேலை இல்லாதவர்கள். இந்த கும்பலைக் கைது செய்த தன் வழி ஜோகூர் பாரு வட்டாரத்தில் நிகழ்ந்த ஆறு கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
அக்கும்பலிடமிருந்து திருடப்பட்ட கேபிள்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் மூவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதோடு இருவர் கேபிள் திருட்டு மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளையும் கொண்டிருந்தனர் என்றார் அவர்.
அனைத்து சந்தேக நபர்களும் தண்டனைச் சட்டத்தின் 379வது பிரிவு, 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவு மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின் கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.