கோலாலம்பூர், மார்ச் 2-ஈரான் மற்றும் அந்நாட்டு மக்கள் மீதான சியோனிச இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மலேசியா நாடாளுமன்றம் இன்று ஏகமனதாக வன்மையாகக் கண்டித்தது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, ஈரானின் இறையாண்மைக்கு ஆதரவாக ஒன்றிணைந்து நின்றது இன்று மக்களவையில் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
நாட்டின் கௌரவம் மற்றும் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் மலேசியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இந்த ஒற்றுமை உலகுக்கு பறைசாற்றுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாகப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நீதியின் பக்கம் நிற்பதில் மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறி என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உண்மையைப் பேசுவதால் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சில சவால்களைச் சந்திக்க நேரிடலாம் என்றாலும், மலேசிய மக்களின் குரலாக அஞ்சாமல் செயல்படுவோம் என்று அவர் உறுதியளித்தார்.
ஒரு நாட்டின் தலைவரையும் பொதுச் சொத்துக்களையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், உலக சட்ட ஒழுங்கை மீறும் பயங்கரவாதச் செயல் என்று அவர் கடுமையாகச் சாடினார்.
இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் தலைமையை வன்முறை மூலம் மாற்ற நினைக்கும் வல்லரசுகளின் ஆணவப் போக்கை எந்தவொரு நாகரிக சமூகமும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நிர்வாகத்தையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க வெளியில் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தமது அரசாங்கம் எப்போதும் விழிப்புடன் இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிட்ட இயக்கங்கள் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் காவல்துறை விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்
.நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய பிரதமர், மக்கள் அனைவரும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.








