ஜொகூர் பாரு, பிப் 27- கடந்த ஆண்டு யுனிவர்சிட்டி டெக்னோலோஜி மலேசியா (UTM) பலாபேஸ் பயிற்சி அதிகாரி ஷாம்சுல் ஹாரிஸின் மரணத்திற்கு காரணமானதாக, மலேசிய ஆயுதப் படையைச் சேர்ந்த மேஜர் முகமது அஸ்மி அபு பக்கர் உட்பட மூன்று பயிற்றுநர்கள் மீது இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த 2024 ஜூலை 28 அன்று உலு திராம் துப்பாக்கிச் சுடும் தளத்தில் பயிற்சியின் போது 22 வயதான ஷாம்சுல் ஹாரிஸிற்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் காயம் ஏற்படுத்தியதாக இவர்கள் மூவர் மீதும் தண்டனைச் சட்டம் பிரிவு 304(a)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஹைடா ஃபரிட்சால் அபு ஹசன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அதிகாரிகளுக்கு, தலா 20,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
தங்கள் தரப்பு மேல்முறையீட்டில் இந்தச் சம்பவம் தற்செயலானது என்று குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதாகவும் சேவைக் காலத்தில் இதுவரை ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்னதாக, உயிரிழந்த மாணவரின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்ற உத்தரவின் பேரில் உடல் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் ஆவணத் தாக்கல் ஆகியவற்றிற்காக ஏப்ரல் 13-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நிலையில், மரணம் தொடர்பான கூடுதல் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








