ஷா ஆலாம், கிள்ளான், பிஜேவில் காற்றுத் தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு; இரவு வரை நீடிக்கும்

26 பிப்ரவரி 2026, 7:48 AM
ஷா ஆலாம், கிள்ளான், பிஜேவில் காற்றுத் தூய்மைக்கேடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு; இரவு வரை நீடிக்கும்

ஷா ஆலாம், பிப் 26: கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல மாவட்டங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டைப் (IPU) பதிவு செய்துள்ளன. இந்த நிலை இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பெட்டாலிங் ஜெயாவில் IPU 100 ஆகவும், ஷா ஆலாமில் 104 ஆகவும் பதிவாகியுள்ளது. கிள்ளானில் மிக அதிக அளவாக 175 பதிவாகியுள்ளது.

மலேசிய காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) சமீபத்திய தரவுகளின்படி, சிலாங்கூரில் உள்ள கோல சிலாங்கூர் (59), பந்திங் (89) மற்றும் ஜோகான் செத்தியா (74) போன்ற பிற பகுதிகள் மிதமான அளவைப் பதிவு செய்துள்ளன.

இந்தச் சூழல் சமூக ஊடகப் பயனர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புகைமூட்டம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ள அவர்கள், கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக வெடிக்கப்பட்ட பட்டாசுகளே காற்றின் தரம் மோசமடைந்ததற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

"எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் எனக்கு மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டது. பலமுறை இன்ஹேலர் பயன்படுத்தியும், வாந்தி வரும் அளவுக்கு இருமல் இருந்தது," என்று எஃபா.ஒய் கூறினார்.

மேலும், தனது வீட்டின் சுற்றுப்புறத்தில் நேற்று மாலை வரை எரிந்த பட்டாசுகளின் வாசனை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சுபாங் ஜெயாவில் புகைமூட்டம், புகையின் வாசம் வருவதால் எங்காவது தீப்பிடித்துள்ளதா?" என்று லிண்டாயுன் 92 கேள்வி எழுப்பினார்.

மற்றொரு இணையவாசியான Mbkr8_, புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மூடியுள்ள அடர்த்தியான புகையால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டின் அளவைத் துல்லியமாக அறிந்துகொள்ள MyIPU செயலி மூலம் IPU அளவைக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கட்டுப்பாடற்ற பட்டாசு வெடிக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமற்ற IPU அளவுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஈனா என்பவர் கருத்து தெரிவித்தார்.

"இன்று காலை எழுந்ததும் காற்று புகைமூட்டமாகவே இருந்தது. IPU அளவைப் பார்த்தால் அது ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.