கோத்தா கினபாலு, பிப் 20: நேற்றிலிருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சபாவின் மூன்று மாவட்டங்களான கோத்தா மருடு, பித்தாஸ் மற்றும் பைத்தான் ஆகியவை இன்று காலை வெள்ளத்தில் மூழ்கின.
சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மூன்று மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் அதிகாலை 6 மணியளவில் அதிகாரப்பூர்வப் பேரிடர் அறிவிப்பை வெளியிட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட களத் தகவல்கள் மற்றும் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) அறிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக அடையாளம் காணப்பட்ட குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், இன்று அதிகாலை சண்டாக்கான், பத்து 7-இல் உள்ள தாமான் மெர்பாத்தியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை 4.52 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீயணைப்புப் படையினர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது அங்கு நீர்மட்டம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இதுவரை எவ்வித இடமாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே செல்லுமாறு அப்பகுதி மக்களுக்குத் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலை 5.43 மணியளவில் அங்குக் கண்காணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தன.



