கூச்சிங், அக் 1- போலீஸ் அதிகாரி மற்றும் டச் 'அண்ட் கோ அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட ஒரு தொலைபேசி அழைப்பு மோசடி கும்பலிடம் சிக்கி மீரியைச் சேர்ந்த 66 வயதான ஓய்வுபெற்ற தனியார் துறை ஊழியர் 22 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த உள்ளூர் பெண்ணுக்கு டச் அண்ட் கோ பிரதிநிதி என்று கூறிக்கொண்ட ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்ததாக மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
அந்த ஆசாமி, இணைய மோசடி கும்பலில் ஈடுபட்டதாக அம்மாது மீது குற்றம் சாட்டினார். பின்னர் அந்த அழைப்பு பினாங்கு காவல் துறை தலைமையகத்தில் உள்ள ஒரு காவல் அதிகாரியுடன் இணைக்கப்பட்டது. விசாரணை நோக்கங்களுக்காக ஊழியர் சேம நிதி (இபிஎஃப்) உட்பட அனைத்து சேமிப்புகளையும் மீட்கும்படி அந்த அதிகாரி அம்மாதுவுக்கு உத்தரவிட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாது வங்கி பரிமாற்றம், இணைய பரிவர்த்தனை மற்றும் பொதுமக்கள் இல்லாத அமைதியான இடத்தில் தெரியாத ஒருவரிடம் பணத்தை ஒப்படைத்தல் மூலம் மொத்தம் 22 லட்சத்து 44 ஆயிரத்து 404 வெள்ளியை ஒப்படைத்ததாக முகமட் ஃபர்ஹான் கூறினார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாது பின்னர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
போலீஸ் அதிகாரிகளாக நடித்த மோசடிக் கும்பலிடம் மாது வெ.22.4 லட்சம் பறிகொடுத்தார்.
1 அக்டோபர் 2025, 8:25 AM