தொழில்நுட்பம் தொடர்பான உத்திப்பூர்வ ஒத்துழைப்பை சரவாக் விரிவுபடுத்த வேண்டும் - அபங் ஜொஹாரி

16 பிப்ரவரி 2026, 7:56 AM
தொழில்நுட்பம் தொடர்பான உத்திப்பூர்வ ஒத்துழைப்பை சரவாக் விரிவுபடுத்த வேண்டும் - அபங் ஜொஹாரி

கூச்சிங், பிப் 16– குறைந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலம் என்ற நிலையிலிருந்து வெளியேறி, தொழில்நுட்பத்தை உருவாக்கும் மாநிலமாக மாறும் இலக்கை நனவாக்க, சரவாக் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் தனது உத்திப்பூர்வ ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபங் ஜொஹாரி துன் ஓபெங் கூறினார்.

 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவராகவோ அல்லது நிறுவுபவராகவோ மட்டும் மாநிலம் இனி இருக்க முடியாது என்றும், மாறாக, நீண்டகால போட்டித்தன்மையை உறுதி செய்ய, உயர்மதிப்புள்ள தொழில்நுட்பத்தை வடிவமைப்பவராகவும், உருவாக்குபவராகவும் மாறும் பங்கிற்கு மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 "தொழில்நுட்பத்தை உருவாக்குபவராக மாறுவதற்கான பாதை எளிதானது அல்ல, ஏனெனில் அதற்கு பல நிபுணர்களின் ஆற்றலும், அதிக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவுகளும் தேவைப்படும்."

 "மேலும், இந்தக் கனவை அடைய சரவாக் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் பெருமளவில் ஒத்துழைக்க வேண்டும்," என இன்று 2026 சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

 செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் கேலியம் நைட்ரைடு (GaN) அடிப்படையிலான கூட்டு சிப்களை SMD செமிகண்டக்டர் நிறுவனம் மூலம் வெற்றிகரமாக தயாரித்தது, குறைக்கடத்தித் தொழில் மதிப்புச் சங்கிலியில் முன்னோக்கிச் செல்லும் மாநிலத்தின் திறனை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

 ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள சிஎஸ்ஏ கேடபுல்ட் (CSA Catapult) உடனான ஒத்துழைப்பு, மின்சாரப் பயன்பாட்டின் திறனை அதிகரிக்க உதவும் Keteq AI சாதனங்களில் பயன்படுத்தப்படும் GaN சிப்களை உருவாக்கும் ஆராய்ச்சி கார்டிஃப் நகரில் மேற்கொள்ள வழிவகுத்தது என்றார் அபங் ஜொஹாரி. 

இது தவிர, மாநிலத்தின் உயர் தொழில்நுட்ப சூழலை வலுப்படுத்தும் ஒரு படியாக, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த SMD செமிகண்டக்டர், சரவாக் அறக்கட்டளை (Yayasan Sarawak) மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது என்றும் அவர் கூறினார்.

 இதற்கிடையில், சமூக ரீதியாக நிலையானதும், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறியதுமான ஒரு மாநிலத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிக்க, சீனப் புத்தாண்டு கொண்டாட்ட உணர்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சரவாக் மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 அதே வேளையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவி, அல்லாஹ்யார்ஹம் புவான்ஸ்ரீ ஜுமானி துவாங்கு புஜாங் அவர்களின் மறைவையடுத்து, இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு வருகைகளை நடத்த முடியாததற்காக சீன சமூகத்தினரிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.