கோலாலம்பூர், அக் 10 – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாக்கல் செய்த 2026 பட்ஜெட்டில், நாட்டை 2030-க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) உந்துதல் பெற்ற தேசமாக மாற்றுவதற்கான இலக்கினை அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடாக கிட்டத்தட்ட RM5.9 பில்லியன் தொடர்ந்து வழங்கப்படும்.
உயர்திறன் கொண்ட நிபுணர்களை உருவாக்கவும், ஏ.ஐ சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்திற்கு (NAIO) RM20 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்படும். முக்கியமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), AI மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சிக் கட்டணங்களுக்காக 50% கூடுதல் வரி விலக்கு பெறும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
மேலும், RM2 பில்லியன் முதலீட்டில் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் மூலம் ஒரு சீரான AI கிளவுட் (Sovereign AI Cloud) உருவாக்கப்படும்.
அத்துடன், மல்டிமீடியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு ஏ.ஐ. உருமாற்று மையம் நிறுவப்படும். Blockchain, AI மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு RM53 மில்லியன் மலேசிய டிஜிட்டல் முடுக்க மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் திட்டங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.