ஷா ஆலம், பிப் 13: குவாசா டமான்சாரா உத்திப்பூர்வ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக, சுங்கை பூலோ சாலையில் உள்ள நர்சரி (செடி வளர்ப்பு மையங்கள்) இடங்களைக் காலி செய்ய மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு திட்டத்திற்கு வழிவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் நர்சரி உரிமையாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, தலா 10,000 ரிங்கிட் கருணைத் தொகை (Ex-gratia) வழங்கப்படும் என்று மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ இர். இஸ்ஹாம் ஹாஷிம் தெரிவித்தார்.
மொத்தம் 66 நர்சரி மனைகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது.சம்பந்தப்பட்ட நிலமானது எவ்வித அதிகாரப்பூர்வ ஆவணங்களோ அல்லது முறையான அனுமதியோ இன்றி பயன்படுத்தப்பட்டு வந்த அரசாங்க நிலம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மனிதாபிமான அடிப்படையிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த ஒரு முறை கருணைத் தொகையை வழங்க மாநில அரசு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ – டமன்சாரா வழித்தடத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த மேம்பாலக் கட்டுமானம் அவசியமானது.
நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் இந்த உள்கட்டமைப்புப் பணியை விரைவுபடுத்துவதன் மூலம் பொதுமக்களுக்குச் சிறந்த இணைப்பு வசதிகள் கிடைக்கும் என்று இஸ்ஹாம் ஹாஷிம் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தினார்.


