ஷா ஆலம், டிச 5: கம்போங் ஸ்ரீ இண்டா A (B9) இருந்து ஜாலான் ஹாஸ்பிடல் சுங்கை பூலோவை இணைக்கும் புதிய சாலை, மக்கள் பயண நேரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் இருந்து சுமார் ஐந்து நிமிடங்களுக்கு குறைக்கும்.
1.5 கிலோமீட்டர் தூரமுடைய இந்த பாதை, நெரிசல் குறைப்பு, பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு வேகமான அணுகல் ஆகியவற்றின் மூலம் கோம்பாக் மாவட்ட மக்களுக்குப் பயன் அளிக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“ஒவ்வொரு மேம்பாட்டு செலவும் வெறும் செலவாகாது, அது மக்களுக்கு நன்மை வழங்க வேண்டும் என்பதை இது நிரூபிக்கிறது,” என்று அவர் தனது முகநூலில் தெரிவித்தார்.
RM44.55 மில்லியன் மதிப்புள்ள இத்திட்டம், மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN) மற்றும் சிலாங்கூர் பணித்துறை (JKR) ஆகியவற்றின் ஒத்துழைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
நிலையான மற்றும் உயர் தரம் கொண்ட மேம்பாடு சிலாங்கூர் நிர்வாகத்தின் முக்கிய அடிப்படையாக தொடரும்.
“இந்த திட்டம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருந்து, கோம்பாக் மக்களின் நலனையும் உயர்த்தட்டும்,” என்று அவர் தெரிவித்தார்.



