ஷா ஆலம், ஜனவரி 8: சுங்கை பூலோவில் உள்ள ஒரு உள்ளூர் கார் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான சேவை மற்றும் வண்ணப்பூச்சுப் பட்டறையில் நேற்று மாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கார்கள் எரிந்து சாம்பலாகின.
மாலை 5.17 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) முதல் தீயணைப்பு வாகனம் மாலை 5.33 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) சிலாங்கூர் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். “மேலும் டாமன்சாரா, ரவாங், புக்கிட் ஜெலுத்தோங் மற்றும் பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீயை அணைக்கும் பணியில் 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள், ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு தண்ணீர் லாரிகள் ஈடுபட்டன," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 200 x 200 சதுர பரப்பளவு கொண்ட 'பி' வகை கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு கார் சேவை மற்றும் வண்ணப்பூச்சுப் பட்டறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
மாலை 6.28 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், ஆரம்பக் கணக்கீட்டின்படி 51 கார்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.



