சிலாங்கூர் அரசு சிறு வணிகர்கள் மற்றும் வீட்டு வசதித் திட்டத்திற்காக RM3.67 மில்லியன் ஒதுக்கீடு

6 பிப்ரவரி 2026, 2:38 AM
சிலாங்கூர் அரசு சிறு வணிகர்கள் மற்றும் வீட்டு வசதித் திட்டத்திற்காக RM3.67 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 6: சிலாங்கூர் மாநில அரசு இந்த ஆண்டு வசதி குறைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'புளூபிரிண்ட்' (Blueprint) உதவித் திட்டத்திற்காக RM1.67 மில்லியன் நிதியையும், 'Rumah Kerajaan Prihatin' (RKP) வீட்டுத் திட்டத்திற்காக RM2 மில்லியன் நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உதவித் திட்டங்கள் முறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.

பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவர், இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் வெளிப்படையாகவும் முறையாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், துணை மாவட்ட அதிகாரிகள் மற்றும் கிராமத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார். இந்த ஒருங்கிணைப்பின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கான நிதியுதவி விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம், சிப்பாங், பெட்டாலிங், கோம்பாக், கோலா லங்காட் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிள்ளான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 'புளூபிரிண்ட்' திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு RM298,916.94 நிதியும், வீட்டுத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு RM605,000 நிதியும் வழங்கப்படவுள்ளது. அதே வேளையில், சிப்பாங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் இதுவரை வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

முதற்கட்டமாக, 'புளூபிரிண்ட்' உதவித் திட்டத்தின் கீழ் சிறு வணிகர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இதர தேவைகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விரைவாக வழங்கும் பொருட்டு, மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு வழியாக நேரடியாக விநியோகிப்பாளர்களுக்கே நிதி செலுத்தப்படும் என்று பாப்பாராயுடு விளக்கினார். வறுமையை ஒழிப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் மாநில அரசு கொண்டுள்ள இலக்கை அடையும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட இந்த உதவிகள் தகுதியுடைய மக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.