ஷா ஆலம், பிப் 4- இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மாவட்ட அளவிலான புளூபிரிண்ட் உதவி மற்றும் Rumah Kerajaan Prihatin ஆகிய திட்டங்களின் ஒருங்கிணைப்பை மாநில அரசு வலுப்படுத்தியுள்ளது.
மாலை நடைபெற்ற சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்தார். மாவட்ட அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் கிராமத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டம், மாவட்ட அளவில் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த அமர்வு உள்ளூர் தேவைகளை ஆராயவும், களப்பணியில் ஏற்படும் சவால்களைக் கண்டறியவும் வாய்ப்பளித்தது. மேலும், இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்குத் திட்டங்கள் முழுமையாகவும் பயனுள்ள முறையிலும் சென்றடைவதை உறுதி செய்யத் தேவையான மேம்பாட்டுப் பரிந்துரைகளும் விவாதிக்கப்பட்டன," என்று அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பயனாளிகளிடம் உதவிகளை வழங்கவுள்ளதாகப் பாப்பாராயுடு தெரிவித்தார். இதுவரை உதவி வழங்கப்படாத மீதமுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு நாளை முதல் அந்தப் பணிகள் தொடரும் என்றும் அவர் கூறினார். மாநில அரசின் கொள்கைகளும் திட்டங்களும் வெற்றியடைய மாவட்டத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பெட்டாலிங் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உபகரண உதவித் திட்டத்தின் கீழ் 24 வணிகர்களுக்கு 170,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான ஒதுக்கீட்டை அவர் வழங்கினார். இதில் சிப்பாங்கில் 18 வணிகர்களுக்கு 129,500 ரிங்கிட் மதிப்பிலான உதவிகளும், பெட்டாலிங்கில் 6 வணிகர்களுக்கு 41,157 ரிங்கிட் மதிப்பிலான ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.
அனைத்து உபகரண உதவிகளும் வரும் ஜூன் மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் அடுத்த கட்டப் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். புளூபிரிண்ட் உதவித் திட்டத்திற்காக மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட்டும், ஐ-சீட் (I-SEED) திட்டத்திற்காக 1 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார். இதற்கிடையில், பூர்வகுடி மக்கள் உட்பட அனைவரின் வீட்டு வசதி மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக 'ரூமா கெராஜான் பிரிஹத்தின்' திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.


