புத்ராஜெயா, பிப் 7: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வருகையின் போது, பொதுமக்கள் பொது இடங்களில் எவ்விதக் கூட்டங்களையும் நடத்த வேண்டாம் என உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த வருகையை முன்னிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறை, நாளை தலைநகரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேரணியின் ஏற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாக உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட அந்தப் பேரணியைத் தொடர வேண்டாம் என ஏற்பாட்டாளர்களிடம் காவல்துறை ஒத்துழைப்பு கோரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான தூதரக உறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் பிரதிபலிக்கும் இந்த வருகையின் போது, பொது அமைதியைக் குலைக்கும் அல்லது இடையூறு விளைவிக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அரச மலேசிய காவல்துறை பொறுப்பேற்றுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின் பாதுகாப்பையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தக் காவல்துறை தொழில்முறை ரீதியாகவும் உறுதியாகவும் தனது கடமையைச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான அமைதிப் பேரணி ஒன்றைக் கோலாலம்பூரில் நடத்த 141 அரசு சாரா நிறுவனங்கள் (NGO) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசுகையில், நாடு ஒரு விருந்தினரை வரவேற்கும் வேளையில் எந்த ஒரு தரப்பினரும் இடையூறுகளை விளைவிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்று வலியுறுத்தியதாக மடாணி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி தெரிவித்தார். மலேசியாவிற்கு வருகை தரும் நாட்டின் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


