ஷா ஆலம், பிப்ரவரி 5 — பாண்டமாரான் ஜெயா சாலை 63 ல் உரிமம் இன்றி இயங்கி வந்த வாகனக் கழுவும் நிலையம் ஒன்றை கிள்ளான் அரச மாநகர சபை அமலாக்க நடவடிக்கையின் போது கைப்பற்றியது. அந்த நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அது முறையான வணிக உரிமம் இன்றி இயங்கியது, முழுமையாக வெளிநாட்டுத் தொழிளாளர்களால் நடத்தப் பட்டதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2007-ஆம் ஆண்டு வணிக மற்றும் சேவை மைய சட்டத்தின் கீழ் அந்த வளாகத்தின் மீது பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனது நிர்வாக எல்லைக்குள் உரிமம் இல்லாத வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என்று கிள்ளான் அரச மாநகர சபை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், டத்தோ டகாங் மசூதிக்கு வரும் தொழுகையாளர்களுக்காக வாகன நிறுத்துமிடத்தைச் சீரமைக்கும் பணிகளையும் இன்று அதிகாலை கிள்ளான் அரச மாநகர சபை மேற்கொண்டது. தொழுகையாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்பு பணிகளுக்காக மசூதி நிர்வாகம் மாநகர சபைக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. குறிப்பாக, விரைவில் வரவிருக்கும் ரமலான் மாதத்தில் மசூதிக்கு வரும் தொழுகையாளிகளுக்கு இந்த முயற்சி பெரும் வசதியாக அமையும் என்று அந்நிர்வாகம் குறிப்பிட்டது


