போலி மற்றும் மற்றவர்களின் அடையாள அட்டைகளை பயன் படுத்திய 52 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

4 பிப்ரவரி 2026, 8:59 AM
போலி மற்றும் மற்றவர்களின் அடையாள அட்டைகளை பயன் படுத்திய 52 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

ஷா ஆலம், பிப் 4: வேலைவாய்ப்பு பெறுவதற்காகப் போலி அடையாள அட்டைகளையும், மற்றவர்களுக்குச் சொந்தமான அடையாள அட்டைகளையும் பயன்படுத்திய 52 சட்ட விரோதக் குடியேறிகள்  ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைது செய்யப் பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சூலு இனத்தவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பணியில் சேர்ந்ததோடு, அதன் மூலமே ஊதியமும் பெற்று வந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தேசியப் பதிவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று தேசியப் பதிவுத் துறையின் துணை இயக்குனர் சரினா அபிசா தெரிவித்தார். முகவர்கள் மூலமாகவே தங்களுக்கு இந்த அடையாள அட்டைகள் கிடைத்ததாகப் பெரும்பாலானோர் காரணம் கூறுவதாகவும், சிலரிடம் எந்த ஒரு அடையாள ஆவணங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் கடத்தல் கும்பல் உள்ளதா அல்லது உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்து தங்களின் அடையாள அட்டைகளை வெளிநாட்டினரிடம் ஒப்படைத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அந்த அடையாள அட்டைகளின் உண்மையான உரிமையாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக புத்ராஜெயா தேசியப் பதிவுத் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து 1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தின் பிரிவு 25(1)(e)-ன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.