பாசிர் மாஸ், பிப் 3: நிப்பா நச்சுயிரி பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிளந்தான் மாநிலத்திலுள்ள மலேசியா-தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும் அனைத்து நபர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை உள்ளிட்ட சுகாதாரக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரந்தாவ் பாஞ்சாங், புக்கிட் புங்கா மற்றும் பெங்காலான் கூபோர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகங்களில் (ICQS) இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்யும் பொருட்டு, சுகாதாரத் துறை பணியாளர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரந்தாவ் பாஞ்சாங் எல்லை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மலேசியர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டவர் உட்பட அனைவரும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக உடல் வெப்பப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் 37.5 பாகை செல்சியஸிற்கும் அதிகமான உடல் வெப்பநிலையைக் கொண்டிருப்பவர்கள், மேலதிகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களது பயண வரலாறு, உடல்நல அறிகுறிகள் மற்றும் இடர் மதிப்பீடு குறித்த பரிசோதனைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கிளந்தான் மாநிலச் சுகாதாரத் துறை இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது குறிப்பாக இந்தியாவிலிருந்து வருபவர்கள் மூலம் இந்த நச்சுயிரி நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அந்தத் துறையின் இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாக்கோப் விளக்கமளித்தார்.


