மன்னரின் மன்னிப்பு அதிகாரம் என்பது ஓர் அரசியல் பரிசல்ல

3 பிப்ரவரி 2026, 3:13 AM
மன்னரின் மன்னிப்பு அதிகாரம் என்பது ஓர் அரசியல் பரிசல்ல

குவாந்தான், பிப் 3: கூட்டரசு அரசியலமைப்பின் 42-வது பிரிவின் கீழ் வழங்கப்படுபடும் மன்னிப்பு அதிகாரம் என்பது, ஓர் அரசியல் பரிசாகவோ அல்லது தனிப்பட்ட அனுதாபத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் செயலாக கருதப்படக்கூடாது என பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.

இந்த மன்னிப்பு அதிகாரம் என்பது நாட்டின் தண்டனைச் சட்ட அமைப்பில் இறுதிப் பரிசீலனையாகச் செயல்படும் ஒரு சட்டபூர்வமான அரசியலமைப்பு வழிமுறை என்று அவர் குறிப்பிட்டார். "அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த மன்னிப்பு அதிகாரம், அமைதியான மனநிலை மற்றும் தெளிவான சிந்தனையுடன் மதிப்பிடப்பட வேண்டும். மாறாக, அதிகப்படியான உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது," என்று அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தண்டனைக் குறைப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பை அழிப்பதோ, குற்றப் பதிவுகளை நீக்குவதோ அல்லது நாட்டின் நிர்வாகத்திற்கு அடிப்படையாக விளங்கும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதோ அல்ல என்று சுல்தான் சுட்டிக்காட்டினார். மேலும், இத்தகைய மன்னிப்புகள் அல்லது தண்டனைக் குறைப்புகள் எந்தவொரு தனிநபருக்கோ, கட்சிக்கோ அல்லது பதவியில் இருப்பவர்களுக்கோ மட்டுமேயான பிரத்தியேகச் சலுகை அல்ல என்றும் அவர் விளக்கினார்.

"ஒவ்வொரு ஆண்டும், மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களிடமிருந்து, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான கைதிகள் மற்றும் சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட தண்டனைக் குறைப்பு அல்லது மன்னிப்பினைப் பெறுகின்றனர்," என்று அவர் கூறினார்.

மன்னிப்பு தொடர்பான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதில்லை; மாறாக, நாட்டின் முக்கியத் துறைப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் மூலமே எடுக்கப்படுகின்றன. இது நாட்டின் அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலையைப் பிரதிபலிக்கும் பல அடுக்கு முறையிலான ஒரு செயல்முறை என்று அவர் கூறினார்.

"மன்னிப்பு அதிகாரம் என்பது சட்ட அமைப்பின் பலவீனமாகப் பார்க்கப்படக்கூடாது. இந்த நாடு சமூக ஊடகங்களின் உணர்ச்சிகளால் நிர்வகிக்கப்படுவதில்லை; அரசியல் மேடைகளில் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை; பொதுமக்களின் கோபத்தால் அரசியலமைப்பு மாற்றப்படுவதில்லை என்பதற்கான தெளிவான நினைவூட்டலே இதுவாகும்," என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். மலேசியா தொடர்ந்து கொள்கை ரீதியாகவும் உறுதியாகவும் விளங்கும் என்று தாம் நம்புவதாகவும், பகாங் மாநிலமும் நாடும் இறைவனின் அருளைப் பெற தாம் பிரார்த்திப்பதாகவும் சுல்தான் தமது உரையை நிறைவு செய்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.