கோலாலம்பூர், ஜூன் 21: தந்தை என்ற உயரிய பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து தந்தைகளுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா சரித் சோஃபியா வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வாழ்த்தில், ஒரு குடும்பத்தின் வலிமைக்கும் நிலைத்தன்மைக்கும் தந்தையே முக்கிய ஆதாரமாக இருப்பதோடு, பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் என மாமன்னர் குறிப்பிட்டார்.
மேலும், தந்தையின் தியாகம், அன்பு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக தனது மனமார்ந்த நன்றியையும் மாமன்னர் தெரிவித்தார்.
“பல நேரங்களில் அந்த அன்பும் அர்ப்பணிப்பும் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாமல் இருந்தாலும், ஒரு தந்தையின் பாசமும் சேவையும் பிள்ளைகளின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்,” என்று அவர் கூறினார்.







