ஜொகூர் பாரு, பிப் 3: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது குடும்பத்தினருடன் ஜொகூர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு அம்மாநிலத்தின் வரலாற்று மற்றும் கலாச்சாரச் சிறப்புகளைக் கண்டு களித்தார். அந்த இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு,
கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜொகூர் மாநிலத்திற்கானத் தமது பயணம் இனிதே நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின் போது பிரதமருடன் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
பிரதமரும் அவரது குடும்பத்தினரும் பிற்பகல் 3.27 மணிக்கு ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தடைந்தனர். அங்கிருந்து மாலை 4 மணி அளவில் மின்சார விரைவு இரயில் சேவை (ETS) மூலம் அவர்கள் கோலாலம்பூருக்குப் பயணமானார்கள். இரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுடன் பிரதமர் சிறிது நேரம் உரையாடியதோடு, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் தமது பேரக்குழந்தைகளுடன் ஜொகூர் விலங்கியல் பூங்காவிற்குச் சென்றார். அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய அவர், பூங்காவின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்த விளக்கங்களையும் கேட்டறிந்தார். இந்த விலங்கியல் பூங்கா பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மாநில பாரம்பரியச் சொத்தாகத் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஜொகூர் சுல்தானகத்தின் அரசக் கருவூலங்கள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களை பாதுகாக்கும் அபு பக்கர் அரச அருங்காட்சியகத்திற்கு பிரதமர் வருகை தந்தார். இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஜொகூர் சுற்றுலா ஆண்டு 2026' இலக்கிற்கு ஏற்ப, வரலாற்றுச் சின்னங்களை மேம்படுத்தி சுற்றுலா ஈர்ப்புகளை விரிவுபடுத்தி வரும் ஜொகூர் மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்




