10 வீரர்களுடன் விளையாடினாலும், திரங்கானுவிலிருந்து ஒரு புள்ளியைக் கைப்பற்றியது சிலாங்கூர் FC

2 பிப்ரவரி 2026, 3:12 AM
10 வீரர்களுடன் விளையாடினாலும், திரங்கானுவிலிருந்து ஒரு புள்ளியைக் கைப்பற்றியது சிலாங்கூர் FC

கோல நூருஸ், 2 பிப்ரவரி — கோல் அடிப்பதில் காணப்பட்ட தடுமாற்றம்  காரணமாக,  திரங்கானு FC (TFC) தங்களது சொந்த மைதானத்தில் சிலாங்கூர் FC அணியை வீழ்த்த முடியாமல், லீக் சூப்பர் போட்டியில் 1-1 என்ற சமநிலையுடன் திருப்தியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டி சுல்தான் மிசான் சைனல் அபிடின் மைதானத்தில்  (SSMZA) நேற்று இரவு நடைபெற்றது.

திரங்கானு FC-யின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளர் தெங்கு ஹஸ்மான் ராஜா ஹசன் கூறுகையில், வீரர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும், அவற்றை கோல்களாக மாற்றத் தவறியதே இரண்டு மதிப்பெண்களை இழக்கக் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

குறிப்பாக இரண்டாவது பாதியில், அதிக வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருந்தும், கோல் அடிக்க முடியாத நிலை தொடர்ந்ததாக அவர் கூறினார்.

“மொத்தத்தில் வீரர்களின் செயல்திறனும் போராட்ட மனப்பாங்கும் திருப்தியளிக்கிறது.     ஆனால், இதுவரை நீடித்து வரும் அதே பிரச்சினை தொடர்கிறது — பல வாய்ப்புகளை உருவாக்குகிறோம், ஆனால் அவற்றைக் கோல்களாக மாற்ற முடியவில்லை,” என அவர் போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில், திரெங்கானு FC மற்றும் ‘தி ரெட் ஜெயன்ட்ஸ்’ என அழைக்கப்படும் சிலாங்கூர் FC அணிகள் தலா ஒரு கோல் அடித்து, ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

இதற்கிடையில், சிலாங்கூர் FC-யின் தலைமைப் பயிற்சியாளர் கிம் பான் கோன், இரண்டாவது பாதியில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், தனது அணியின் போராட்ட ஆவலும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கதாக இருந்ததாகக் கூறினார்.

முழு மூன்று புள்ளிகளைப் பெற்றுச் செல்லுவதே ஆரம்ப இலக்காக இருந்த போதிலும், பெற்ற ஒரு புள்ளி திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. திரங்கானு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. இருப்பினும், இரண்டாவது பாதியில் 10 வீரர்களுடன் விளையாடிய போதும், நாங்கள் சில நல்ல வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது,” என அவர் கூறினார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு, சிலாங்கூர் FC 16 போட்டிகளில் 32 புள்ளிகளுடன் லீக் சூப்பர் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. முதலிடத்தில் ஜோகூர் (JDT)  உள்ளது. இதே எண்ணிக்கையிலான போட்டிகளில் 25 புள்ளிகளைப் பெற்றுள்ள திரெங்கானு FC, ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.