கோலாலம்பூர், ஜனவரி 31 : தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் வெள்ளி ரத ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது.

பக்தர்களின் "வேல் வேல்..." என்ற பக்தி கோஷங்கள் விண்ணதிர, மனமகிழ்ச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரதத்தைப் பின்தொடர்ந்து பத்துமலை திருத்தலத்தை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.
இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி, வெள்ளி ரதமானது ஜாலான் ஈப்போ (Jalan Ipoh) 3 ½ மைல் கல் பகுதிக்கு அருகில் வந்தடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த ரதம் இன்று மாலை சுமார் 5.00 மணியளவில் பத்துமலை திருத் தலத்தைச் சென்றடையும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

ரதம் பத்துமலையைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து, சேவல் கொடி ஏற்றி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கி கொண்டாடப்படும்.



