பத்துமலை தைப்பூசத் திருவிழா: முன்னேற்பாடுகளைப் பிரதமர் அன்வார் நேரில் ஆய்வு

30 ஜனவரி 2026, 9:39 AM
பத்துமலை தைப்பூசத் திருவிழா: முன்னேற்பாடுகளைப் பிரதமர் அன்வார் நேரில் ஆய்வு
பத்துமலை தைப்பூசத் திருவிழா: முன்னேற்பாடுகளைப் பிரதமர் அன்வார் நேரில் ஆய்வு

கோலாலம்பூர், ஜன 30: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்துக்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள தைப்பூசத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து நேரில் ஆய்வு செய்தார்.

​ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக விளங்கும் பத்துமலையில், இவ்வாண்டு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் இந்த வருகை அமைந்தது.

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பத்துமலைக்கு வருகை தந்த பிரதமரை, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் , மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, திருவிழா நடைபெறும் முக்கிய இடங்களுக்குப் பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த ஆய்வின் போது, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள 'மடாணி தைப்பூசம்' (MADANI Thaipusam) சேவை கூடாரங்களை அவர் பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மற்றும் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளின் சேவை மையங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு செலவிட்ட பிரதமர், அங்கிருந்த தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களுடன் கலந்துரையாடினார். திருவிழா சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

​இன்று இரவு 9.00 மணியளவில், ஜாலான் துன் எச்.எஸ். லீ-யில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கிய இரத ஊர்வலம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, கோலாலம்பூரின் முக்கிய 12 சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் சாலை மூடல்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.