தங்காக், ஜன 28: உணவுக் கடை வியாபாரி ஒருவர், தனது நிறுவனத்தின் வங்கி தகவலை வழங்குமாறு காவல்துறை அதிகாரி போல் காட்டிக் கொண்டு ஏமாற்றிய நபரால் RM364,500 இழந்தார்.
நேற்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த ஜனவரி 23ஆம் தேதி சந்தேக நபர் 58 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டு பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி பயமுறுத்தியதாகத் தங்காக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
"குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் வங்கியிலிருந்து பெறப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) உட்பட தனது கடையின் வங்கித் தகவலை சந்தேக நபரிடம் ஒப்படைத்தார்," என்று ரோஸ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதன் விளைவாகப் பாதிக்கப்பட்டவரின் இணைய வங்கித் தகவல் மூன்றாம் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் பணம் மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


