தேசிய மொழியைத் தற்காப்பதோடு பன்மொழி ஆற்றலையும் வளர்ப்பதே அரசின் இலக்கு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி 

22 ஜனவரி 2026, 7:32 AM
தேசிய மொழியைத் தற்காப்பதோடு பன்மொழி ஆற்றலையும் வளர்ப்பதே அரசின் இலக்கு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி 

பெந்தோங், ஜன 22 – நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், தேசியப் பள்ளிகள் உட்பட அனைத்து மாணவர்களும் மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சி பெறுவது மிக அவசியமானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். 

இன்று பெந்தோங்கில் உள்ள பெர்திங் தேசிய வகை சீனப் பள்ளியில் (SJKC Perting) சீனச் சமூகத்துடனான சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தேசிய மொழியை வலுப்படுத்துவது என்பது மற்ற தாய்மொழிகளையோ அல்லது ஆங்கிலம், அரபு போன்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்பையோ பறிப்பதாகாது என்று தெளிவுபடுத்தினார்.

மலேசியர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிட ஆங்கிலப் புலமை அவசியம் என்றாலும், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மலாய் மொழியில் அனைவரும் ஆளுமை பெற்றிருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், தேசியப் பள்ளிகளில் சீனம், தமிழ் அல்லது அரபு மொழிகளைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை வழங்க கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மொழி விவகாரங்களில் இனங்களுக்கு இடையே முடிவற்ற சர்ச்சைகள் உருவாவதை அரசு விரும்பவில்லை என்றும், மாறாக மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நமது பிள்ளைகள் ஏசியான் மற்றும் உலக அளவில் போட்டியிட வேண்டுமெனில், அவர்கள் மொழிகளுடன் சேர்த்து டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்," என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்திய பிரதமர், பெர்திங் சீனப் பள்ளியின் பராமரிப்புப் பணிகளுக்காக 1.35 கோடி ரிங்கிட்  ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்தார். இதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரிங்கிட் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.