'Grok' செயலி விவகாரம்: 'X' நிறுவனத்துடன் தொடர்பு அமைச்சின் இன்றைய சந்திப்பு முக்கிய மைல்கல்லாக அமையும் - டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

21 ஜனவரி 2026, 7:15 AM
'Grok' செயலி விவகாரம்: 'X' நிறுவனத்துடன் தொடர்பு அமைச்சின் இன்றைய சந்திப்பு முக்கிய மைல்கல்லாக அமையும் - டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

கோலாலம்பூர், ஜன 21- மலேசியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) செயலி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, 'X' (முன்னர் டிவிட்டர்) நிறுவன பிரதிநிதிகளுடன் தொடர்பு அமைச்சு இன்று மாலை ஒரு முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளது.

இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து விளக்கமளித்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், Grok செயலியின் செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கத்தைப் பெறுவதும், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் தற்போதைய முக்கிய இலக்காகும் என்று கூறினார்.

இன்று நடைபெற்ற 'தானியங்கி வாகன' (Autonomous Vehicle) அறிமுக விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு நாடுகள் மற்றும் அரசாங்கங்கள் வழங்கிய கருத்துக்களை ஏற்று, 'X' நிறுவனம் தனது செயலியில் மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

"உலகளாவிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தமது செயலியில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ள 'X' நிறுவனத்தின் அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன். மலேசியாவின் தேவைகள் மற்றும் உணர்திறன்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச தரத்திற்கு ஏற்ப அவர்கள் இணங்கி வருவது ஒரு நல்ல முன்னேற்றமாகும்," என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆலோசனை முடிந்தவுடன் வெளியிடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

முன்னதாக, Grok செயலியின் சில 'Prompt' அடிப்படையிலான எடிட்டிங் வசதிகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, MCMC அந்தச் செயலியைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது.

ஆபாசமான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும், தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் படங்களைச் சிதைத்து வெளியிடுவதற்கும் Grok செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்ட காரணத்தினால், மலேசியாவில் அதன் பயன்பாட்டிற்குத் தற்காலிகத் தடை விதிக்க ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.