கோலாலம்பூர், ஜன 20- மலேசியாவின் கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கில், வரும் 2027-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை வயதில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இதன்படி, பாலர்பள்ளிக் கல்வியானது ஐந்து வயதிலும், தொடக்கப்பள்ளியின் முதலாம் ஆண்டு ஆறு வயதிலும் தொடங்கும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று நடைபெற்ற 2026-2035-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் (RPN) தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "இந்த மாற்றங்கள் உடனடியாகக் கட்டாயமாக்கப்படாது. கல்வித்துறை சார்ந்தவர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இப்போதைக்கு இது கட்டாயமாக்கப்படவில்லை" என்று விளக்கமளித்தார்.
இந்தத் திட்டமானது மலேசியாவின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்துவதோடு, மாணவர்களின் ஆரம்பக்காலக் கற்றலை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


