கோலாலம்பூர், ஜன 13– தற்கால சூழலில் ஒரு சில முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கைப் பாதையைத் தொலைத்து, உலகாதாயப் பொருட்கள், பதவி ஆசை மற்றும் அதிகார போதையில் சிக்கியுள்ளதாக மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
பொருள் செல்வம் என்பது ஒரு புதிய சித்தாந்தமாக மாறி வருவதாகவும், இது ஆரோக்கியமற்ற போட்டிகள் மற்றும் அறநெறி மீறல்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய தேசிய இஸ்லாமிய விவகாரங்கள் கவுன்சிலின் (MKI) தலைவருமான சுல்தான் நஸ்ரின் ஷா, இன்று நடைபெற்ற கவுன்சிலின் 74-வது கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில், பதவிக்காகவும் அதிகாரத்திற்காக வும் லஞ்சம் கொடுப்பது மற்றும் மற்றவர்களை வீழ்த்த அவதூறு பரப்புவது போன்ற செயல்கள் மனித நேயத்தை சீரழிப்பதோடு, ‘ஜாஹிலியா’ காலத்தின் அறியாமை மனநிலையை மீண்டும் பிரதிபலிப்பதாக கூறினார்.
"பதவியும் அதிகாரமும் ஒரு மனிதனின் இறை நம்பிக்கை மற்றும் நேர்மைக்கு விடப்படும் சோதனையாகும். முறையான இறை பயம் இன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அது இறை கட்டளைக்கு மாறாக மனித ஆணைகளுக்கு அடிபணியச் செய்யும்," என்று அவர் எச்சரித்தார்.
மேலும், கல்வி என்பது வெறும் கல்வி சாதனைகளை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அறிவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீகம் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான மனிதர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) டாக்டர் ஜுல்கிஃப்லி ஹசான் மற்றும் அரசு உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய நிறுவனங்களை வழிநடத்துவோர் சந்தேகத்திற்கு இடமில்லாத நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அந்த நிறுவனங்கள் மீதான எதிர்மறையான பார்வையை மாற்ற முடியும் என்றும் சுல்தான் நஸ்ரின் ஷா தனது உரையில் கேட்டுக்கொண்டார்.


