ஈப்போ, நவ.9: பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா தமது 69 வது வயது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெர்சாம் வட்டாரத்தில் சுமார் 150 குடும்பத்தினருக்கு உணவுக்கூடைகள் வழங்கப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய சட்டத்துறை துணையமைச்ருமான எம். குலசேகரன் கூறினார்.
பேராக் சுல்தான் மனிதநேய பண்பாளர். இங்குள்ள மெருவில் அவரின் ஆதரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள் அளிக்கும் வகையில் " மறுவாழ்வு பயிற்சி மையம்" நிறுவப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையதின் வாயிலாக பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 4 வருடங்களாக இந்த பி40 குடும்பத்தார் மற்றும் தனிநபர்களுக்கு ஈப்போ பாராட் நாடாளுமன்றத்தின் மக்கள் சேவை மையம் தொடர்ந்து உதவிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த 69 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈப்போ மாநகரில் வணிக தளங்களில் பேராக் மாநில கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இது ஒரு சிறப்பான தினமாக கொண்டாடப்படுகிறது. அத்துடன், அவ்வப்போது சுல்தானை சந்திக்கும் பொழுது அவர் மக்களின் நிலைப்பாடு குறித்து அதிகம் விசாரிப்பார் என்று அவர் சொன்னார்.
அண்மையில் தம்புன் தொகுதியில் சன்வே மருத்துவமனை திறப்பு விழா கண்டது. அதனை நமது சுல்தான் திறந்து வைத்தார். இன்றைய காலகட்டத்தில் சுகாதாரம் மக்களின் முக்கிய பாதுகாப்பு மையமாக உருவாகி விட்டது. இத்தகைய மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டால் அது மக்களுக்கு பேருதவியாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்




