கோலாலம்பூர், டிச 18 - இன்று காலை, பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் பிஜேஎஸ் 6/4, கம்போங் லிண்டுங்கனில், ஐந்து வயது மகளுடன் காரை திருடிச் சென்றபோது, கணவன்-மனைவி பதற்றமான தருணத்தை எதிர்கொண்டனர்
இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு காலை 7.24 மணிக்கு புகார் கிடைத்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி ஷம்சுடின் மமாட் கூறினார்.
தம்பதியினர் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, காலை உணவு வாங்குவதற்காக தங்கள் மகளை காரில் விட்டுச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் நடவடிக்கையை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பெட்டாலிங் ஜெயாவின் மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பந்தப்பட்ட வாகனம் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், கடத்தலுக்கான தண்டனைச் சட்டப் பிரிவு 363 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் ஷம்சுடின் கூறினார்.
தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நேரடியாக வரலாம் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-7966 2222 அல்லது விசாரணை அதிகாரியை 012-223 7272 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


