கோலாலம்பூர், டிச 17- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த மடாணி அரசாங்கத்தின் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சராக மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் அவர்களும் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தாம் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்து கொள்வதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்த நியமனங்கள் என்பது, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் மக்களின் நலனைப் போராடிப் பெறுவதில் இரு தலைவர்களின் திறமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மீது நாட்டின் தலைமைத்துவம் கொண்டுள்ள முழு நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
இந்திய சமூகத்தின் கவலைகளையும், குறிப்பாக அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய ஒரு முழு இந்திய அமைச்சரின் தேவையையும் செவிமடுத்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொண்டார்.
இந்த நியமனம் மலேசிய இந்திய சமூகத்தின் குரல், அபிலாஷைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரமாகும். இப்போது, இந்திய சமூகம் பிரதமரின் தலைமையிலான மடாணி அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து, தற்போதைய தலைமைத்துவத்தை ஆதரித்து, சிறந்த எதிர்காலத்திற்காக சமூகத்தின் கோரிக்கைகளையும் தேவைகளையும் விவேகமான, ஒன்றுபட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வழங்கப்பட்டுள்ள இந்த பெரிய பொறுப்பு, குறிப்பாக தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதிலும், பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும், மேலும் ஒரு நியாயமான, முற்போக்கான மற்றும் ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்குவதிலும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


