ஷா ஆலம், மே 28 - பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் ஷா ஆலம், செக்சன் யு3 பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த அங்காடிக் கடைகளை இடிக்கும் நடவடிக்கையை ஷா ஆலம் மாநகர் மன்றம் நேற்று மேற்கொண்டது.
சம்பந்தப்பட்டக் கடைகள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு
காரணமாக இருந்ததைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு கூறியது.
காவல்துறை, குடிநுழைவுத் துறை, தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் ஆயர் சிலாங்கூர் உள்ளிட்ட துறைகளின் 150 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் 2007 ஆம் ஆண்டு அங்காடி வியாபார துணைச் சட்டத்தின் கீழ் 10 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
இதற்கிடையில், ஊராட்சி மன்றத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட 21 வர்த்தகக் கூடாரங்கள் 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் (சட்டம் 133) இன் கீழ் இடிக்கப்பட்டன என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதே சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.
மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் துறை கடந்தாண்டு டிசம்பரில் உரிமம் பெறாத வியாபாரிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தை சம்பந்தப்பட்ட வியாபாரிகளுடன் நடத்தியது.
கூட்டத்தின் போது மாநகர் மன்ற நிர்வாகப் பகுதியின் கீழ் உள்ள தற்காலிக வியாபாரத் தளத்திற்கு இடம்பெயரவும் கடைகளுக்கு விண்ணப்பிக்கவும் வியாபாரிகளுக்கு மூன்று மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டது என்று அது குறிப்பிட்டது.


