ஷா ஆலம், ஜன 23: வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கான தடையை அமல்படுத்துவதற்கான சிலாங்கூரின் முன்மொழிவு இந்த ஆண்டின் மத்தியில் இறுதி செய்யப்படும்.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கான தடையை நீட்டிக்கும் நடவடிக்கை பசுமை சூழலையை நோக்கிய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
"இந்த முன்மொழிவு இவ்வாண்டு மத்தியில் இறுதி செய்யப்படும். ஒன்றாக நாம் பசுமையான சிலாங்கூரை நோக்கி செல்வோம்! என அவர் முகநூலில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக ஒவ்வொரு வணிக வளாகத்திலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு சிலாங்கூர் தடை விதித்தது என்று ஜமாலியா அறிவித்தார்.
அமலாக்க நடவடிக்கை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தின் அதிகார வரம்பு உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள், சிறு சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களின் ஆதரவுடன், 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் `பிளாஸ்டிக் பை வேண்டாம்` என்ற பிரச்சாரத்தை சிலாங்கூர் செயல்படுத்தத் தொடங்கியது.
ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் நுகர்வோரிடம் 20 காசுகள் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்படும் பணம் தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நலன் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கு அனுப்பப்படும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜமாலியா 2023 ஆம் ஆண்டு வரை, கடையில் உள்ள ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் 20 சென் என்ற கட்டணத்தின் மூலம் RM38 மில்லியனை சிலாங்கூர் வசூலிக்கும் என்று தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் பணம் 2024 சுற்றுச்சூழல் திருவிழா, சோலார் விளக்குகள் நிறுவுதல், கல்விக்கான மர நிகழ்ச்சிகள், புவி தின கொண்டாட்டங்கள் மற்றும் சமூக தோட்ட திட்டங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.


