ஷா ஆலாம், ஜூலை 3 - சிலாங்கூரின் Mega JobCare எனும் பேரளவிலான வேலை வாய்ப்பு கண்காட்சியின் மூலம் நிலைத்தன்மையற்ற பொருளாதார சூழலால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து உதவி வருகின்றது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு முயற்சியாக இந்த Mega JobCare நிகழ்ச்சி அமைவதாக மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பராய்டு தெரிவித்தார்.
வேலைத் தேடுபவர்களுடன் இந்த Mega JobCare நிகழ்ச்சிக்கு மாணவர்களும் வருகைத் தர ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் வழி தொழில்துறையின் தேவை என்ன என்பதை கண்டறிந்து அதற்கான மேற்கல்வியைத் தேர்வு செய்யும் முடிவினை மாணவர்கள் எடுக்க முடியுமென அவர் கூறினார்.
Mega JobCare நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 8,9-ஆம் தேதிகளில் ஷா ஆலாம், SACC பேரங்காடியில் நடைபெறும். 100-க்கும் அதிகமான முதலாளிகள் அக்கண்காட்சியில் பங்குபெறும் வேளையில், 10,000 பேர் வருகை தந்து அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த சிலாங்கூர் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு 15 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.







