SELANGOR

மைசெல் திட்டத்தின் வாயிலாக 2,522 பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றனர்

22 ஜனவரி 2025, 8:14 AM
மைசெல் திட்டத்தின் வாயிலாக 2,522 பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றனர்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜன. 22- சிலாங்கூர் மாநில அரசின் மைசெல் எனப்படும்

அடையாள ஆவண உதவி மையத் திட்டத்தின் வாயிலாக இதுவரை 2,522

பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் முயற்சியால் அவர்கள் அனைவருக்கும் பிறப்பு பத்திரம்,

குடியுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு

உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.

அடையாள ஆவணங்கள் தொடர்பில் மொத்தம் 6,545 விண்ணப்பங்கள்

கிடைக்கப் பெற்ற வேளையில் அவற்றில் 2,522 விண்ணப்பங்களுக்கு தீர்வு

காணப்பட்டன. அங்கீரிக்கப்பட்டவற்றில் குடியுரிமை தொடர்பான 854

விண்ணப்பங்களும் பிறப்பு பத்திரம் தொடர்பான 616 விண்ணப்பங்களும்

தத்தெடுப்பு தொடர்பான 560 விண்ணப்பங்களும் அடங்கும் என அவர்

சொன்னார்.

அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோரில்

பலர் தேர்வை எழுதும் மாணவர்களாக உள்ளதால் அவர்களுக்கு உதவும்

நோக்கில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

குடிநுழைவுத் துறை அல்லது உள்துறை அமைச்சின் அதிகாரத்தில்

தலையிடும் நோக்கம் மாநில அரசுக்கு கிடையாது. அடையாளப்

பத்திரங்களைப் பெறுவதற்கு தேவையான அடிப்படை உதவிகளை

வழங்கும் பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார் அவர்.

மைசெல் முயற்சியால் அடையாள ஆவணங்களைப் பெற்ற 22 பேருக்கு

இங்குள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற அடையாளப் பத்திரங்களை

வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்

அவர் இதனைத் தெரிவித்தார்.

அடையாள ஆவணங்களைப் பெறும் விஷயத்தில் அலட்சியம் காட்ட

வேண்டாம் என பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு

ஆலோசனைக் கூறிய அவர், முறையான ஆவணங்கள் இல்லாத

காரணத்தால் பலரது விண்ணப்பங்கள் இன்னும் அங்கீரிக்கப்படாமல்

உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அடிப்படையான ஆவணங்கள் இல்லாததால் சிலர் டி.என்.ஏ. எனப்படும்

மரபரணு சோதனைக்கு உட்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும்

வழஙகப்படும் ஆவணங்களைப் பொறுத்து விண்ணப்பங்களை

அங்கீகரிப்பதற்கு ஒன்று முதல் ஏழாண்டுகள் வரை தேவைப்படுகிறது

என்று அவர் சொன்னார்.

அடையாளக் கார்டு மற்றும் பிறப்பு பத்திரம் போன்ற ஆவணங்களை

பெறுவதற்கான வழிமுறை தெரியாத குறைந்த வருமானம் பெறும்

தரப்பினருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கடந்த 2018ஆம் ஆண்டு

மைசெல் திட்டத்தை தொடக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.