(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜன. 17- இங்குள்ள பண்டார் பொட்டானிக் குடியிருப்பு பகுதியில்
ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண எட்டு அம்சங்களை
உள்ளடக்கிய செயல் திட்டத்தை விரைந்து அமல்படுத்த செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண
உதவக்கூடிய இத்திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு நிதி
ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ
பண்டாருடன் விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று குணராஜ்
தெரிவித்தார்.
கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மற்றும்
சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களின் உதவியுடன் கால்வாய்களைச் சுத்தம்
செய்வது, துப்புரவுப் பணிகளை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக
அனைத்து வீடுகளின் பின்புறமும் பாதாள சாக்கடைகளில் துவாரங்கள்
உள்ளதை உறுதி செய்வது, அகண்ட கால்வாய்களைத் துப்புரவு செய்வது
ஆகியவை அந்த எட்டு வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் அடங்கும் என்று
அவர் சொன்னார்.
இவை தவிர, மேம்பாட்டாளர் அமைத்துள்ள 16 குப்பைத் தடுப்புகள் சீரான
நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் காரணத்தால் அவற்றை அகற்றுவது,
ஏரி நீர் வெளியேற்ற சுரங்கப் பாதையை துப்புரவு செய்து விரிவாக்குவது,
பத்து நீலாம் நர்சரி அருகே உள்ள கால்வாயை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பண்டார் பொட்டானிக் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதற்கான
காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் பொருட்டு கிள்ளான் அரச
மாநகர் மன்றம், வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, கும்புலான் டாருள்
ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், பண்டார் பொட்டானிக்
குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதிகள், மாநகர் மன்ற உறுப்பினர்கள்
உள்ளிட்ட தரப்பினருடன் தாம் நேற்று சந்திப்பு ஒன்றைத் நடத்தியதாக
குணராஜ் சொன்னார்.
அந்த சந்திப்பின் போது வெள்ளத்திற்கான காரணமாக விளங்கும்
அம்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றை சரி
செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
என்று அவர் குறிப்பிட்டார்.


